Saturday, October 22, 2011

வாழ்க்கை மற்றும் நட்பு கவிதைகள்


                     
1. பணம் படுத்தும் பாடு

பணம் என்றால் பல் இழிக்கும் 
பாதாள உலகத்தில் 


பணம்தேடி அலைகின்ற 
பாவிகளாய் நாம் இங்கே. 


ஆடிக் காற்றில் பறக்கின்ற 
அம்மியைப் போல் நம்வாழ்க்கை 


பணம் தேடும் பயணத்தில் 
பலவாராய் அலைகின்றோம் . 


அயல்நாட்டில் பிழைப்புக்காய் 
அயராது உழைக்கின்றோம் 


அம்மாவின் தாய்ப்பாசம் 
கிடைக்காமல் தவிக்கின்றோம் . 


நோய் நொடியும் வந்துவிட்டால் 
குடும்பமே இங்கு கூடி நிற்க 


கவனிப்பார் இல்லாமல் 
அங்கோ நாம் தனியாக . 


பணம் தேடி சென்றுகொண்டு 
பாசத்தை தொலைத்துவிட்டோம் 


பாசம் மட்டும் போதுமென்றால் 
வாழ்க்கை இங்கே வாழ இல்லை . 


அப்பாவின் அன்பின்றி 
அம்மாவின் அரவணைப்பின்றி 


அண்ணாவின் அதட்டலின்றி 
தம்பியுடன் செல்ல சண்டையின்றி 


ஆதரவு இல்லாத அங்கே 
அனாதையாய் நம் வாழ்க்கை . 


பணம் படுத்தும் பாட்டில் நல்ல 
பாசத்தை இழந்துவிட்டோம் . 


புரிந்துகொண்டு வாழ்ந்தாலும் 
புரியாத வாழ்க்கை இதில் , 


பணமின்றி வாழ்வதென்பதும் 
பலனில்லா வாழ்க்கையன்றோ ...........


2.வாழ்க்கை பாடம்

வாழ்க்கை படம் படித்துவிட்டேன், 
வாழ்வை நானும் அறிந்துவிட்டேன், 
அன்பு பாசம் காதல் என்று 
வேஷம் போட்டு வாழும் வாழ்க்கை , 


நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் 
நன்மை இல்லை இந்நாளில் 
கெட்டவனாய் வாழ்ந்திருக்க மனம் 
நினைப்பதில்லை எந்நாளும் . 


நல்லவனாய் வாழ்பவனோ 
நலிந்து கொண்டு போகின்றான் , 
சுயநலமாய் என்றும் வாழ்பவனே 
சிறப்பாய் இங்கே வாழ்கின்றான் . 


கள்ளமும் சூதும் பொய்களுமே 
ஆட்டிவைக்கும் இந்நாட்டில் 
உண்மையான உழைப்புக்கோ 
உயர்வில்லை எந்நாளும் . 


லஞ்சம் ,ஊழல் , கொள்ளை என்று 
லாவகமாய் வாழ்பவனே 
உழைத்து வாழும் மக்களின் 
உடமைகளை சுரண்டுகிறான். 


மதம் என்னும் போர்வையிலே 
மக்களை இங்கு ஏமாற்றும் 
கள்ளச் சாமியார்களின் 
சல்லாப வாழ்க்கை முறை , 


மக்களின் வரிப்பணத்தை 
வகைவகையாய் கொள்ளையிடும் 
அரசியல் வியாதிகளின் 
அழிச்சாட்டிய வாழ்க்கை முறை , 


நடுவில் சிக்கிக்கொண்டு 
நசுங்கி வாழும் குடிமக்களோ 
போதையின் பிடியில் சிக்கிக்கொண்டு 
பாதைகளை மறந்து போயினரே . 


அரசே இன்று மதுக்கடையை 
ஆங்காங்கே திறந்திருக்க 
எங்கனம்தான் திருந்துவரோ 
எம்முடைய குடிமக்கள் . 


உழைத்துவந்த பணத்தையெல்லாம் 
மதுக்கடையில் குடித்துவிட்டு 
பட்டினியால் பரிதவிக்கும் 
குடும்பம் இங்கே கோடி கோடி . 


இலவசங்கள் தந்து தந்து - மக்களை 
இயலாதவராய் ஆக்கிவிட்ட - அரசு 
கண்டவற்றை இலவசமாய் தர - உயர் 
கல்வியை தந்தால் என்ன ? 


கல்வியை நீ இலவசமாய் தந்தாலே 
கரை ஏறிடும் மக்களின் வாழ்க்கை 
நாடும் வீடும் செழித்திடுமே 
பல நன்மைகள் வந்து சேர்ந்திடுமே . 


நாடு திருந்த வேண்டும் என்றால் 
நல்லவனாய் வாழவேண்டாம் 
மனிதனாய் வாழ்ந்தால் போதும் 
மனதிற்கு பயந்து என்றும் . 


மனித நேயம் வளர்த்தெடுப்போம் ! 
மண்ணின் மைந்தர்களாய் வாழ்ந்திருப்போம் ! 


3.எங்கே கிராமிய கலைகள் எங்கே ?

அழகுக் கலைகளை ஈன்ற தாய் தமிழ்நாட்டில்-இன்று 
கிராமக் கலைகளோ கரைதேடி அலைகின்றது 


கரகாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் எல்லாம் 
கோவில் திருவிழாவில் கூட கண்ணில் தெரிவதில்லை, 


தமிழனின் வீரம் சொல்லும் சிலம்பாட்டமோ - இன்று 
எடுப்பார் கைப்பிள்ளையாய்க் கிடக்கின்றதே. 


கராத்தே,குங்க்பு,கோபுடோ எல்லாம் நமது 
சிலம்பத்தை செயலிழக்க செய்ததுவோ ? 


அந்நிய மோகத்தில் அழகு கலைகள் எல்லாம் 
நம் கண்ணுக்கு கழிவாக தெரிகின்றதோ ? 


தமிழகம் தந்த அந்த வர்மக்கலையை இன்று 
கண்ணில் காண்பது என்பது எளிதானதா ? 


சப்பானும் சீனமும் இன்று வரையில் தன் 
கலைகளை பொக்கிஷமாய் காத்து நிற்க 


பண்பாட்டில் ஊறி நிற்கும் நமது நாடோ 
கிராமக் கலைகளை வளர்த்தெடுக்க தயங்குவதா 


கரகம் என்றொரு கலையும் உண்டா - என 
நாளை குழந்தை நம்மிடம் கேள்வி கேட்க்கும் 


நாளைய சந்ததியின் கேள்விக்கு நமது பதில் தான் 
என்ன என்பதை நாம் முதலில் சிந்திப்போம் 


நாம் பார்த்த கலைகளை நம் சந்ததிகளும் 
காண காரியம் செய்வது நம் கடமையன்றோ . 


கலைநயம் கொண்ட கிராமியக் கலைகளை 
நாளும் வளரச்செய்வது நம் பெருமையன்றோ .......


4.என்றும் நட்புடன்


கூடிவாழ்ந்தால் கோடி நன்மை - என்று 
காட்டியதோர் நல்ல நட்பு... 
நண்பனென்றால் நட்பு அல்ல - பெற்ற 
தகப்பனைப்போல் தாயுள்ளம் உண்டு .. 


எனக்கு வலிக்க அவனும் துடிப்பான் 
என் தோல்வி கண்டு கரை ஏற்றிடுவான், 
இனிமையிலும் அருகில் இருந்திருப்பான் - என் 
தனிமையினை என்றும் வென்றெடுப்பான்... 


முயற்சிக்கு முதுகெலும்பாய் இருப்பான் - யாரும் 
இகழ்ச்சி கொண்டால் எரிமலையாய் வெடிப்பான் 
என் காதலுக்கு இவன் தூதும் செல்வான் 
வேண்டாம் காதலென்று போதனையும் தருவான்.. 


நட்பு எனும் மந்திரம் என்றும் - அது 
துடுப்பாய் வாழ்வில் வந்திடும்.. 
என்றும் வாழும் இனிய நட்பு -எதையும் 
வென்று காட்டும் நமது நட்பு... 


5.வேண்டாம் இன்னொரு தீவிபத்து

பார்த்துப்பார்த்து வளர்த்த பிள்ளை, 
பத்துத்திங்கள் கருவில் கனிந்த பிள்ளை.. 


வகுப்பறைக்கு போன பிள்ளை 
தீக்கு இறையாய் ஆயினளோ... 


பிஞ்சுக் கையால் கொஞ்சி கொஞ்சி 
நெஞ்சில் இட்டு வளர்த்த பிள்ளை 


அக்னியின் கோரத்தாண்டவத்தால் 
அதன் பசிக்கு ஆளாய் ஆயினளோ ... 


பள்ளிகளின் பணத்தாசை 
பெற்ற பிஞ்சுகளை பிணமாக்கியதோ.. 


பற்றி எறிந்த பள்ளி நெருப்பு 
பெற்ற வயிற்றில் கொள்ளியாக... 


இனியும் வேண்டாம் அக்னியே 
பிஞ்சுகளுடன் உன் வஞ்சம் எதற்கு... 


பணத்தாசை கொண்ட மிருகங்களே 
உயிருடன் எதற்கு உன் விளையாட்டு... 


அக்னி தேவனின் கோர பசியால், கும்பகோணம் பள்ளியில் தீயிற் கருகி இறந்த 94 பச்சிளம் குழந்தைகளின் நினைவு தினம் ,,,,,


6. ஆத்திசூடி ( 2011 )

அன்பே நல்ல பண்பு .... 


ஆபத்தில் துணிந்து நில் .... 


இயன்றதை செய் இயலாதவர்க்கு ..... 


ஈடுபாட்டுடன் எதையும் செய்.... 


உண்பதற்கு வாழாதே ..... 


ஊதாரியாய் சுற்றாதே ..... 


எதிர்நீச்சல் பழகு ... 


ஏற்றிவிட்டோரை மறவாதே ..... 


ஐயம் தீரும்வரை கேள்வி கேள் .... 


ஒருவரையும் இகழாதே .... 


ஓடி ஆடி வேலை செய்.... 


ஔவை பாடிய தமிழை போற்று.... 


7. வானளாவிய நட்பு

வாழ்வாங்கு வாழ்க ! என - 
வாழ்த்திய சொந்தங்கள் கூட 
வாய்தீர குற்றம் பேசும் _ நாம் 
வாழ்க்கையில் சறுக்கி விழும் நேரம்... 


வாழ்ந்துகாட்டுவாய் நண்பா - நீ 
வாழ்நாளில் என்றும் என - நாம் 
வாழ்க்கையில் சறுக்கிய நேரமும் 
வாழவைக்க நம்பிக்கை ஊட்டும் ஒரே சொந்தம், 


வானளாவி உயர்ந்து நிற்கும் 
வரம்பெற்ற நட்பு மட்டும் தான்....


8. என் கணிணித் தோழி

தோழி என்ற வார்த்தையிலே 
தோழமை மட்டும் அல்ல அங்கு 
தாய்மையும் கலந்து உள்ளதென 
காணக்கிடைக்கப் பெற்றிருந்தேன் .. 


நேரத்திற்கு சாப்பிடு 
நிம்மதியாய் தூங்கி எழு 
உடல்நிலை என்றும் பத்திரமாம் 
நீ வெல்லும் காலம் வெகு தொலைவில் அல்ல 


இந்த வார்த்தைகள் யாவும் இனியவையாய் 
என் தாயின் வாய்வழி கேட்ட பின்பு 
என் கண்ணால் காணபெற்றேனே 
என் தோழியின் கடிதத்தில் கணிணியிலே 


என் காதல் இங்கே கைகூட 
அங்கே கட்டளை இட்டாள் கடவுளிடம் 
என் எண்ணம் யாவும் ஈடேற 
வேண்டிக்கொண்டாள் இறைவனிடம் 


பார்துப்பழகிக் கிடைத்த நட்பே 
பாழாய்ப் போகும் இக்காலம் 
முகமறியா இக்கணினி நட்போ 
காலம் நெடுகும் கூட வர 


என்றும் வேண்டும் என்பதையே 
அந்த இறைவனை வேண்டி வாழ்கின்றேன்..... 



9. கடற்க்கரை சல்லாபங்கள்


அழகை ரசிக்க.... 
அமைதியை ருசிக்க... 
இயற்கையின் விந்தையை 
வியந்தவண்ணம் 
அலையோடு அலையாக 
நானும் அமர்ந்திருந்தேன்..... 
கண்கூச வைத்தது 
காதில் நாராசமாய் வழிந்தது 
காதல் என்ற பெயரில் 
காதலர்கள் புரிந்த 
காமக்களியாட்டங்கள்.....


10. கவிதை எழுத நினைத்த பொழுது

மழைக்கால வானவில் .... 
மாலை நேர மஞ்சள் வானம் .... 


அதிகாலை பனி படர்ந்த பூக்கள்.... 
ஆகாயத்தில் இரவுநேர முழுமதி.... 


சிற்றலை ஆடும் நீலக்கடல் .... 
சீறிப்பாயும் காட்டருவி...... 


விடியல் நேர செஞ்சூரியன் .... 
வீதியினில் அம்மன் உலா.... 


அம்மா ஊட்டிய பிடி சோறு.... 
ஆற்றில் விட்ட காகிதக்கப்பல் .... 


தூங்கும் நேரத்தில் மெல்லிசைப்பாடல்... 
துயிலெழும் வேளை சுப்ரபாதம்.... 


மின்சார கம்பிகளில் சிட்டுக்குருவிகளின் சல்லாபம்... 
மீன் பிடிக்க குளக்கரையோரம் காவல்..... 


புத்தக இடுக்கில் மயில்த்தோகை.... 
பூதக்கண்ணாடியில் புன்னகை முகம்.... 


கவிதை எழுத நினைத்து காகிதத்தை எடுத்தேன் . 
கண்முன்னே வந்து நின்றது இந்த காட்சிகள்.... 


11. ஆண்மை எனப்படுவது - 1

கட்டியமனைவியின் கன்னத்தில் உன் 
கைரேகை பதியவைப்பதில் அல்ல ஆண்மை .... 
கடைசிவரை உன் அன்பால் அவள் உள்ளத்தில் 
காதல் ரேகையை பதிய செய்வதே ஆண்மை...


13. ஆண்மை எனப்படுவது - 2

கண்ட பெண்ணை மஞ்சத்தில் வீழ்த்துவதில் அல்ல ஆண்மை ... 
கொண்ட பெண்ணின் நெஞ்சத்தில் வீற்றிருப்பதில் உள்ளது ஆண்மை....


14. முதல் சந்திப்பில் (காமமா ,காதலா ,நட்பா) 

பெண்ணை கண்ட முதல் சந்திப்பில் 


உன் உடல் கொதித்தால் அது காமம் , 
உன் உள்ளம் கொதித்தால் அது காதல், 
உன் இதயம் குளிர்ந்தால் அதுவே நட்பு....


15. தாகம் 

தாகம் தாகம் தாகம் 


இங்கு தாகத்துக்கு தண்ணீர் இல்லை . 


தண்ணீர் கேட்டால் நீ 


என் ஊர் இல்லை . 


இந்தியன் என்ற அடைமொழியோ 


இன்று நீரால் பிரிந்து போனதுவோ ? 


தானத்திலே இனி சிறந்த தானம் 


தண்ணீர் என்று ஆகிடுமோ ? 


தவித்த வாய்க்கு தண்ணீர் தந்த 


இந்த புண்ணியவானை நான் 


எங்கனம் வாழ்த்த......



16. உலக (கோப்பை) போர் ........

இராமனோடு வானரங்கள் 
வாயுபுத்திரன் சேரவே !!!!!! 


இராமநாமம் பாடிவந்து 
லங்கை மீது சாடவே !!!!!!!! 


இராவணன் தன் மதியிழந்து 
சேனையோடு கூடவே !!!!!!!!!! 


இராமனோத் தன் தனுவில் நாணை 
ஏற்றி நின்றுப் பாடவே !!!!!! 


இராவணனின் தேகம் தன்னைக் 
கூறு நூறாய்ப் போடவே !!!!!! 


சீதைக்காக அந்தப் போர் 
உலகக்கோப்பைக்காக இந்தப் போர்...................


17. விளம்பரம் செய்யாதே

விளம்பரம் செய்யாதே 
என்பதற்கு கூட இங்கே 
விளம்பரம் செய்யும் விந்தையான உலகமிது ......


18. பணத்தின் மேல் மோகம்

நெருப்பின் மீது கொண்ட மோகத்தால் 
தன்னை இழக்கிறது மெழுகுவர்த்தி....... 


பணத்தின் மீது கொண்ட மோகத்தால் 
நல்ல பண்பை இழக்கிறது மனித புத்தி........


19. தண்ணீர் தேடும் பாமரன் கண்ணீர்

ஒக்கேனக்கலில் இருந்து ஒழுக்கு நீர் கிடைக்குமோ?

இல்லையெனில்

முல்லைபெரியாரிலிருந்து முழுவதும் கிடைக்குமோ?

இப்போதைய தேவைக்கு இந்த அழுக்கு நீரே கதி......

தண்ணீர் தேடும் பாமரனின் கண்ணீர் ...........


20. நண்பர்களோடு கூடி மகிழ்ந்த நாட்கள்

நம் வாழ்வில் எத்தனையோ கோடி மகிழ்ச்சியான தருணங்களை கடந்து சென்றிருந்தாலும் அது நம் தோழர்களுடன் கூடி கழித்த சிலநொடி மகிழ்ச்சிக்கு ஈடாகுமோ ..... 
குட்டிசுவற்றின் மேல் அமர்ந்து குட்டிகதைகள் பேசி அரட்டை அடித்தது.... 


சாலையில் செல்லும் பெண்ணைகண்டு கூடி சண்டையிட்டு பார்வையால் ரசித்தது... 


அதே பெண் தன் நண்பனின் காதலியாக மாறிவிட்டால் அவளை தன் தமக்கையாக பாவித்து 
பாசமலரானது...... 


தேநீர்விடுதியில் மறைவாக நின்று ஒரு புகயிலைசுருள் வாங்கி நட்போடு 
பகிர்ந்த்திளுத்தது.... 


தெருக்களில் மட்டைபந்து ஆடி நடந்துசெல்வோரின் 
மண்டையை உடைத்தது... 


^நாங்க எல்லாம் அந்த காலத்துல^ என்று போதனை செய்ய வரும் பெருசுகளை ^நாராயணா இந்த கொசுதொல்ல தாங்கலடா^ என்று குறும்பு செய்தது.. 


எதிர்வீட்டு மாமியை கூடிநின்று ஏடாகூடமாக சிந்தனை செய்தது.... 


மொட்டைமாடி நிலவொளியில் ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டே உறங்கியது......... 


நண்பனின் அக்காவின் திருமணத்திற்கு சென்று தண்ணீர் விருந்து என்னும் பெயரில் நண்பனிடம் பணம் பறித்து அவனை பாடாய்படுத்தியது....... 


போதையில் தடுமாறிய நண்பனை தாங்க நண்பர்களின் கரங்கள் ஒன்றாய் கூடியது..... 


காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் இருந்த நண்பனை ஒன்றக சேர்ந்து சென்று கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று அவனை கடுப்படித்தது.... 


நண்பனின் காதலியை அவனோடு சேர்த்துவைத்து அதனை பெரும் சாதனையாக நினைத்து சந்தோஷத்தில் களித்த்தது.... 


சினிமா கொட்டகையில் சேர்ந்து சென்று சண்டையிளுத்து காவல்நிலையத்தில் சிக்கி தர்மஅடிவாங்கி நண்பனிடத்தில் மச்சான் வலி எப்புடிடா இருக்கு என்று கேள்வி வினவி அந்த வலியிலும் கூடி சிரித்தது...... 


வெளியூரில் வேலைக்கு செல்லும் நண்பனை கூடி சென்று வழி அனுப்பியது.... 


பொருளாதார சிக்கலில் சிக்கிய நண்பனின் கும்பத்திற்கு நட்பை தவிர வேறு ஏதும் எதிர்பாராமல் உதவி செய்து நண்பனின் சோகங்களை பகிர்ந்து கொண்டது.... 


எங்கும் காக்கை கூட்டம்போல ஒன்றாக சுற்றித்திரிந்தது ..... 


சிறு சிறு சண்டைகள் இட்டு பின் பிரிவின் வலியை உணர்ந்து கூடி திளைத்து...... 


இதைவிட மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்வில் கிடைக்குமா? எப்போதும் இப்படியே வாழ்ந்துவிட வேண்டும் என்று மனது நினைக்கிறது , ஆனால் காலமோ நம்மை இதனை கடந்து செல்லவைத்து அதனை வெறும் நினைவலைகளாக மட்டும் உலாவர செய்கிறது...... 
நட்பின் சுகம் வேறு எதிலுண்டு கூறுங்கள் நண்பர்களே....... 


21. வறுமையின் பெருமையை கருவறையில் கண்ட சிசு

வெளிவந்தபின் எனக்கு நேரப்போகும் 
வறுமையின் கொடுமை, 
உன் கருவறைபையிலே எனக்கு தெரிகிறது 
தாயே...............


22. நட்பின் ஆழம் 


கடலின் ஆழத்தையும் 
வனத்தின் உயரத்தையும் 
கணித்த மனிதனால் 
நட்பின் ஆழத்தையும் உயரத்தையும் 
கணிக்க முடியாது....... 
அதுவே நட்பு........


23. நண்பர்கள் யார் ?

நட்பு என்னும் தோட்டத்தில் எதையும் எதிர்பாராமல் 
தேனீக்களுக்கு தேன் கொடுக்கும் 
மலர்கள் போன்றவர்கள் ...........


24.எது நன்றி ?

ஊர் கூட்டி அன்னமிட்டேன் 
ஊர் கோவிலில் வாரா வாரம் , 
உயிருக்கு போராடி ஊர் வெளியில் கிடந்தபோது 
ஊரில் ஒரு நாதி இல்லை உதவி செய்ய . 
ஒரு தெரு நாய் வந்து என் முகத்தை நக்கி ஆறுதலாய் அருகில் கிடந்தது , 
நான் ஒருநாள் இட்ட மிச்ச சோற்றை தின்ற நன்றிக்காக ..............